Saturday, 1 August 2015

பீட்ரூட்


பீட்ரூட் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்ந்து வரும் பண்டைய காயாகும். அந்த காலத்தில் பீட்ரூட்டின் கீரையை மட்டுமே சாப்பிடுவார்கள். பீட்ரூட் பல முறைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதை ஜூஸ் ஆக செய்தால் அதில் தானாக இனிப்பான சுவை வரும். அந்த ஜூஸில் சில மூலிகைகளைச் சேர்த்தும் பருகலாம். பீட்ரூட் பல காலங்களாக மருத்துவ நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் சிவப்பு நிறம் மற்றும் இனிப்புச் சுவையினால் சிறுவர் முதல் முதியவர் வரை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பீட்ரூட்டை சாலட், சூப், ஊறுகாய், பொரியல், கூட்டு மற்றும் குழம்புகளில் சேர்த்துக்கொள்ளலாம் பீட்ரூட்டின் கீரையை உண்ணலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம்... அதை நீங்கள் சாதரணமாக மற்ற கீரைகளைச் சமைப்பது போலவே வேக வைத்தோ, பொரியலாகவோ, கூட்டாகவோ உண்ண லாம்...’’ - பீட்ரூட் பற்றிய அறிமுகத்துடன், அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் பேசுகிறார் டயட்டீஷியன் ஷைனி எஸ்தர்.

‘‘பீட்ரூட் இதயத்துக்கு நன்மை செய்யும் காய். இதில் உள்ள தனிப்பட்ட நிறமி ஆன்ட்டிஆக்ஸிடன்டுகள் (Pigment  Antioxidants) இதய நோய்களுக்கு பாதுகாப்பளிக்கின்றன. இது உடலில் உள்ள கொழுப்பின் (Cholesterol) அளவை குறைக்கும். அதோடு, வயதான தோற்றம் அடையும் தன்மையை குறைக்கும் திறன் கொண்டது. பீட்ரூட்டில் அதிகமான சர்க்கரை அளவு இருந்தாலும், இதை நீங்கள் வாரத்தில் 2 அல்லது 3 தடவை உண்ணலாம். இதன் கீரையை அதைவிட அதிகமாகவும் உண்ணலாம்.

பீட்ரூட்டும் ரத்த அழுத்தமும்

பீட்ரூட் ஜூஸ் குடித்த சில மணி நேரங்களில், அது அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் (100 கிராம்) ரத்த அழுத்தத்தை 45 புள்ளிகள் குறைக்கும் திறன் கொண்டது என்று பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர். மாரடைப்பு வரும் ஆபத்தைக் குறைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இதில் உள்ள அதிக நைட்ரேட் அளவு நைட்ரிக் ஆக்ஸைடு எனும் வாயுவை உற்பத்திச் செய்கிறது. அந்த வாயு ரத்த நாளங்களை விரியச் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இன்னும் சத்துகள் ஏராளம்...

பீட்ரூட்டில் பீட்டசயனின் என்னும் நிறமி (Pigment) உள்ளது. இதுவே பீட்ரூட்டின் நிறத்துக்குக் காரணம். இந்த பீட்டசயனின் ஒரு ஆன்ட்டிஆக்ஸிடன்டும் கூட. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள உயிரணுக்களின் சேதத்தைத் தவிர்க்கும். இந்தக் காயில் உள்ள மூலப் பொருளான betaine  உயிரணுக்களை பாதுகாத்து, அலர்ஜியை தடுத்து, உடல் உறுப்புகளைப் பாதுகாத்து செயல் திறனையும் அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்), நார்ச்சத்து, மாங்கனீஸ் (எலும்புகள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றுக்கு நல்லது), பொட்டாசியம் (ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு உதவும்) போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

இது உடலில் ரத்தம், உயிரணு உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் அளிக்கிறது. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. ஃபோலிக் ஆசிட் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு கருவின் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு அவசியம்...

Spina bifida  என்னும் முதுகுத்தண்டு குறைபாட்டையும் தடுக்கும். பீட்ரூட் இரும்புச் சத்து நிறைந்தது... ரத்த சோகையை நீக்கவல்லது... கர்ப்ப காலத்தில் சோர்வை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. குடல் இயக்கங்களை அதிகரித்து மலச்சிக்கலை தடுக்கும். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் என்சைம்களை அதிகரித்து வெள்ளை அணுக்களையும் பெருக்கி, தொற்று நோய்களை தடுக்கும்.

பீட்ரூட்டில் சக்திவாய்ந்த தாவர ஊட்டச்சத்துகள் (Phytonutrients) உள்ளன. இவை புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. ஆய்வுகளில், பீட்ரூட்டில் உள்ள பீட்டானின் (Betanin) நிறமி புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டில் உள்ள பீட்ட சயனின் (Betacyanin) நிறமியும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் திறன் கொண்டது.

No comments:

Post a Comment