Sunday, 2 August 2015

சதுரகிரி 3


பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

 சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர  தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம்  பெறலாம்.

தொடர்ச்சி  சதுரகிரி  4ல்

No comments:

Post a Comment