Saturday, 1 August 2015

பீன்ஸ்


மெக்சிகோவிலும் பெருவிலும் செட்டிலான இந்தியப் பழங்குடியின மக்களால், தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விளைவிக்கப்பட்ட காய் பீன்ஸ். இன்று சீனா, இந்தோனேஷியா, எகிப்து, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் பீன்ஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. ஃப்ரெஷ்ஷாக பறித்த பச்சையான பீன்ஸை, ‘சத்துகளின் கிடங்கு’ என்றே சொல்லலாம். அதில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரதம், பீட்டா கரோட்டின் என அத்தனையும் உள்ளன. பீன்ஸில் உள்ள லூட்டின், நியோஸாந்தின், குவெர்செட்டின், ப்ரோசையானிடின்ஸ் போன்றவை கண்களின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவக்கூடிய முக்கிய சத்துகள்.

வேறு எந்தக் காயிலும் இல்லாத அளவுக்கு, பீன்ஸில் தாமிரம், வைட்டமின் பி1, பி6 மற்றும் ஈ, குரோமியம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்றவை அதிகம். பீன்ஸை சமைத்த பிறகும், அதிலுள்ள ஃபோலேட் மற்றும் பி வைட்டமின் அளவு 70 சதவிகிதம் தக்க வைக்கப்படுகிறது. பீன்ஸில் உள்ள ஒமேகா 3 (ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்), இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. எலும்பு மற்றும் திசுக்களின் இணைப்புகளுக்கு அவசியமான மினரல் சிலிக்கான்களை உடல் சுலபமாக கிரகித்துக் கொள்ளும் வகையில் தன்னகத்தே கொண்டது பீன்ஸ். இதில் உள்ள அபரிமிதமான வைட்டமின் கே, புண்களை ஆற்றும் செயலை துரிதப்படுத்தக் கூடியது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதிலும், செரிமானப் பாதையில் புற்றுநோயை ஏற்படுத்தும் பாதிப்புகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

முதுமையை விரட்டும்...

பீன்ஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்உள்ளிட்ட சத்துகள், உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்து, முதுமைப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. முதுமையின் காரணமாக ஏற்படுகிற தசை நோய்களையும் அண்டவிடாமல் செய்கின்றன.

குடலைப் பாதுகாக்கும்...

பீன்ஸில் உள்ள நார்ச்சத்தானது குடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன், அங்கே புற்றுநோய்க்குக் காரணமான செல்கள் பாதிப்பதற்கு முன்பே, அவற்றை உடலை விட்டு விரட்டுகின்றன.

இதயத்துக்கு இதமானது...

பீன்ஸில் மிகக்குறைந்த அளவே உள்ளது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆனாலும், அது இதயத்துக்குச் செய்கிற நன்மை மிகப் பெரியது!

யாருக்கெல்லாம் நல்லது?

பீன்ஸ் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. ரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது. உயர் ரத்த
அழுத்தத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீன்ஸ் சிறந்த உணவு. பீன்ஸ் சருமத்துக்கும் நல்லது. வியர்வையைத் தூண்டும்.தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சியைப் போக்கும்.

கை, கால் நடுக்கத்தைப் போக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.
பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்கிற மூன்று தோஷங்களையும் சீராக வைத்திருக்கும். அடிக்கடி பீன்ஸை சேர்த்துக் கொள்பவர்களுக்கு, மாதவிலக்குக்கு முன்பான ‘ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம்’ பிரச்னைகள் குறையும். பீன்ஸில் உள்ள வைட்டமின் கே, ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பிரச்னைகளுக்கு அருமருந்து.

No comments:

Post a Comment