Tuesday, 11 August 2015

ஆலமரம்


ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே. பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் சொல்வார்கள். அதில் தழைப்பிற்கு உரிய மரம் ஆலமரம். தழைத்து ஓங்கி கிளை கோத்திரமாக வாழ்வது என்பது சொல்வார்களே.
அதன்பிறகு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் - கருவேல மரம் என்று தனியாக இருக்கிறது. அந்த கருவேல மரப்பட்டையில் அவ்வளவு விசேஷம் இருக்கிறது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொன்னது.
அதுமட்டுமல்ல, மிகவும் புனிதமானது இந்த மரம். இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் இந்த மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் புனிதமான மரம். இதில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள். இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தைவிட நன்றாக இருக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோரோ·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.
சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள். மக்கு என்று சொல்பவர்களைக் கூட, ஆலமரத்தின் கீழ் போய் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும். எமோஷக், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.
மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமே, அதே மாதிரி இங்கே சும்மா உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம். மன அமைதியைக் கொடுக்கும். நினைவாற்றலைத் தரக்கூடியது. அந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும். அதனால்தான் மக்குப் பிள்ளைகளைக் கூட அங்கு உட்கார வைத்துப் பாருங்கள் அவன் நன்றாகப் படிப்பான். ஒருவிதமான பதற்றம் விலக ஆரம்பித்தாலே மூளை அனைத்தையும் பதியவைக்கத் தொடங்கும்.
இதுமட்டுமல்லாமல், மூலம் அந்தக் காற்றால் குணமாகிறது. ஏனென்றால், அந்தக் காற்றில் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய வெப்பத்தைக் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. வெட்ட வெட்ட முத்தினால் குட்ட என்று சொல்வார்கள். உடம்பில் அதிகச் சூடு ஏற்பட்டால் அதனை வெட்டச் சூடு என்பார்கள். இந்த வெட்ட அதிகமானால் குட்ட. அதாவது, உஷ்ணம் அதிகமானால் குஷ்டம் வந்துவிடும். இந்த வெட்ட குட்ட இரண்டையுமே தணிக்கக் கூடிய நிழல், காற்று அதெல்லாம் உண்டு. அதற்கடுத்ததாக, என்னுடைய தாத்தா ஒரு தண்டம் வைத்திருப்பார். நெடுவழிப் பயணத்தின் போதெல்லாம் அதை கையில் எடுத்துக்கொள்வார். அவரிடம் 4 நாட்களாக ஜுரம் என்று சொல்வார்கள், அதில் 4 தட்டு தட்டுவார். இதேபோல, குழந்தை சரியாகத் தூங்கவேயில்லையென்றால் அதற்கு 4 தட்டு தட்டுவார். வேப்பிலையால் மந்திரித்துவிட்டு அந்த தண்டத்தால் 4 தட்டு தட்டுவார். அதன்பிறகு, காத்து கருப்பு என்று பயப்படுபவர்களுக்கு 4 தட்டு தட்டுவார்.ஏன் தாத்தா வரபவர்களையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கி‌றீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லப்பா, பழமையான ஆல மரத்தினுடைய கம்பு இது. அதில்தான் இதை செய்திருக்கிறேன். ஆலமரத்திற்கென்று சில குணங்கள் உண்டு. அதீத சக்திகள் உண்டு. அதனால் இதில் தட்டினால் சில மாற்றங்கள் உண்டாகும். தெய்வ நம்பிக்கையுடன் அதைச் செய்யும் போது குணப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கும். இன்னமும் அந்த தண்டம் என்னுடைய அப்பாவிடம் இருக்கிறது. அதைத் தொடும்போதே ஒருவிதமான உணர்வு ஏற்படும். அதுபோன்ற குணங்கள் அதற்கு உண்டு. காது, மூக்குப் பிரச்சனைகளுக்கு ஆலம்பாலை பக்குபவப்படுத்தி பயன்படுத்தினால் அது நீங்கும். அடிப்பட்டு வீங்கிய இடத்தில் இந்தப் பாலைத் தடவினால் வீக்கம் வடிந்துவிடும். அதற்கடுத்து, இதன் இலையில் விந்தணுக்களை அதிகரிக்கக் கூடிய சக்தி இருக்கிறது. விந்தணுக்களின் உயிர்த்தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் உண்டு. ஆலமரப்பட்டையை உலர்த்தி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடம்பு பளபளப்பாக ஆகும். இதையெல்லாம் சித்த மருத்துவர்கள் தருவார்கள். ஆலம்பழத்திற்கு சிறுநீர் பாதை கிருமி பிரச்சனைகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீரும்.

Monday, 10 August 2015

கருடன்


கருடன்

*மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.,இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

*பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.

*வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

*பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு,வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.

*கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம்.

*கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும்.ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

*ஞாயிறு – நோய் நீங்கும், திங்கள் – குடும்பம் செழிக்கும்,செவ்வாய் – உடல் பலம் கூடும்,புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்,வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம், வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், சனி – மோட்சம் கிடைக்கும்.

*கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான்,தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

திதி


எந்த நாள் எந்த திதி

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு .

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். .

Saturday, 8 August 2015

அஷ்டலட்சுமிகள்


 1. கஜலட்சுமி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.

2. ஆதிலட்சுமி:-

ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.

3. சந்தானலட்சுமி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்.

4. தனலட்சுமி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.

5. தானியலட்சுமி:-

எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.

6. விஜயலட்சுமி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின் இயல்பு ஆகும்.

7. வீரலட்சுமி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.

8. மஹாலட்சுமி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.

Thursday, 6 August 2015

அங்கோர் வாட் கம்போடியா


உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் !


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

"கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது"! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (மீண்டும் ஒரு முறை), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!



இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது! பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் தெரியவந்தது !!


இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் நாற்பதே ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு, கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது! இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன்.


இறுதியாக வியக்கத்தக்க செய்தி ஒன்று! இந்த 2015வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை !!!


Wednesday, 5 August 2015

ஸ்ரீ ஹயக்ரீவர்

ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.

பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

‘ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே’

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.

அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

ஆத்திசூடியில் ஒளவை கூறியதுபோல்’ நூல் பல கல் ‘ என அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப் படிப்பது போல் ஹயக்ரீவர் தியானத்தையும் கூறி மாணாக்கர் வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

ஹயக்ரீவர் காயத்திரி

‘ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்’

மூலமந்திரம்

‘உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய’

ஞானத்தையும் ஒருமுகப் பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லதும், இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்றத் தேர்ச்சி அடைவோம்.




Monday, 3 August 2015

பகத்சிங்


பகத்சிங்


பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 27, 1907

இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இறப்பு: மார்ச் 23, 1931

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

லாகூர் கொலை வழக்கு

1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

இறப்பு

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்கது.

சண்டிகேஸ்வரர்


சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?
அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்...

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின.

மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம்.
மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன. ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான்.
அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான்.
ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர். அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார்.

மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார்.இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.
எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம். அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நன்றி மாலைமலர்

ரேவதி


ரேவதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்



ஸ்தல வரலாறு:


சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத் தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கு மென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.


சிறப்பம்சம்:


சந்திரனுக்கும், ரேவதிக்கும் சிவபார்வதியும் காட்சி கொடுத்ததால், இது ரேவதி நட்சத்திர தலமாக விளங்குகிறது.


ரேவதி, தினமும் அரூப வடிவில் (மற்றவர் கண்களுக்கு தெரியாமல்) இங்கு வந்து பூஜை செய்கிறாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரநாளில், இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியாக ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனுககும், அம்பாளுக்கும் பொருட்களை சமர்ப் பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.


நோய் தீர்க்கும் தலம்:


காசிக்கு அடுத்து காருகுடி என்ற சுலவடை இந்தப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதாவது, காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும். நீர், கண்சம்பந்தப்பட்ட நோய், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.


கோயில் அமைப்பு:


1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.


ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன் [Surya/Sun]
அதி தேவதை [Ati Devatha] : சனி [ Saturn]


இருப்பிடம்:


திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.


திறக்கும் நேரம் : காலை 6- 11 மணி, மாலை 5- இரவு 8 மணி.


போன்:+91 -97518 94339,94423 58146.


ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கோயில் இருப்பதால், குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது நல்லது.

உத்திரட்டாதி


உத்திரட்டாதி

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்



ஸ்தல வரலாறு :


திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக்க நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம்.


சிறப்பம்சம்:


தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்வதாக ஐதீகம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில், இங்கு வந்து ஹோமம் செய்து சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்கிறார்கள். இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.


பெயர்க்காரணம்:


தீயாகிய


அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் பிரச்னை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தலத்து பிரகன்நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத
முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார்.லட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்


உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : அஹிர்புத்னயர் [Ahirbudnia]
அதி தேவதை [AtiDevatha] : காமதேனு [Kamadhenu]


இருப்பிடம்:


புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ.


திறக்கும் நேரம்: காலை 6- மதியம் 12 மணி


போன்:+91 - 4371-239 212 99652 11768

பூரட்டாதி


பூரட்டாதி

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்


ஸ்தல வரலாறு:


காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.


சிறப்பம்சம்:


ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.


சகாதேவன் போல கல்வியறிவு:


கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும்


வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.


தல சிறப்பு:


காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி தியானம் செய்துள்ளார். இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வணங்கலாம். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.


கோயில் அமைப்பு:


மூலவர் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன.


பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : அஜைகபாதர் [Ajaikapada]
அதி தேவதை [AtiDevatha] : குபேரன் [Kubera]


இருப்பிடம்:


திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரத்தைஅடையலாம்.


திறக்கும்நேரம்: காலை 7 - 9 , மாலை 5.30 - இரவு 7 மணி.


போன்:+91 - 94439 70397, 97150 37810.

சதயம்


சதயம்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்



ஸ்தல வரலாறு:


அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும்
புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.




இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.


சிறப்பம்சம்:


அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81ம் வயதில், இத்தலத்தில் உழவாரப் பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. அப்பருக்கு தனி சன்னதி உள்ளது. சித்திரை சதயத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடத்தப்படுகிறது. அப்போது, பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது மனதை உருக்கும் காட்சியாக இருக்கும். அக்னிபுரீஸ்வரரின் துணைவியாக அம்பாள் கருந்தார் குழலி அருள்பாலிக்கிறாள். அக்னிபுரீஸ்வரர் நீங்கலாக, வர்த்தமானேஸ்வரர் சன்னதியும், அவரது துணைவியாக மனோன்மணி அம்மையும் அருள் செய்கின்றனர். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.


அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவர்த்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர். அம்பாள் கருந்தார்குழலிக்கு திருமணம் ஆகாத பெண்கள், மாலை பூஜையின் போது, வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.


சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : வருணன்[Varuna]
அதி தேவதை [ AtiDevatha ] : யமன் [Yama]


இருப்பிடம்:


திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி.


போன்:+91 - 4366-236 970.

அவிட்டம்


அவிட்டம்

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்



ஸ்தல வரலாறு :


கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்
பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும்கண்டுமிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த


மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது.கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம்என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது.


சுவாமி பெயர்க்காரணம்: பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே, அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும் சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.


சிறப்பம்சம்:


பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய தலமானது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, தங்கள் நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப் பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், மூளை வளர்ச்சிக்கும், குடும்ப ஒற்றுமை வளரவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. முந்திரிப்பருப்பு, நிலக் கடலை மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.


அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : வஸூக்கள் [Vasus]
அதி தேவதை [ AtiDevatha ] : வஸூக்கள் [Vasus]


இருப்பிடம் :


கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை செல்லலாம்.


திறக்கும் நேரம் : காலை 11 - மதியம் 1 மணி, மாலை 5 - 6 மணி.


போன்: +91 - 98658 04862, 94436 78579

திருவோணம்


திருவோணம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்



ஸ்தல வரலாறு :


புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக


சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.


சிறப்பம்சம்:


சந்திரபகவான் ஒரு சாபத்தினால், இருளடைந்து இருந்தான். இதனால், அவனது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள் இத்தலத்தின் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, மூன்றாம் பிறையன்றோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.


திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : விஷ்ணு [Vishnu].
அதி தேவதை [AtiDevatha] : விஷ்ணு [Vishnu]


இருப்பிடம்:


வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.


திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி-, மாலை 4.30 - இரவு 7.30 மணி


போன்:+91 - 4177 254 929, 94868 77896.

உத்திராடம்


உத்திராடம்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்


ஸ்தல வரலாறு:


புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன்




அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.


உத்திராடம் நட்சத்திர ஸ்தலம்:


ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்) உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.


விசேஷ சிவத்தலம்:


பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. சித்திரை பிறப்பன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும். லிங்கோத்பவர் பூஜை: ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.


உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான் நினைத்த விஷயத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : விஸ்வேதேவர்கள் [Viswedevas].
அதி தேவதை [AtiDevatha] : விநாயகர் [Vinayaka ]


இருப்பிடம்:


சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.


திறக்கும் நேரம்: காலை 7 - 11 மணி, மாலை 5 - இரவு 8 மணி.


போன்:+91 - 99436 59071, 99466 59072.

பூராடம்


பூராடம்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்


ஸ்தல வரலாறு:


கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம்


வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.


பூராடம் நட்சத்திர தலம்:


சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.


சித்தர் வழிபாடு:


முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர்
வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.


பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : ஜலதேவர் [Jaladevatha].
அதி தேவதை [AtiDevatha] : வருணன் [Varuna]


இருப்பிடம்:


தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.


திறக்கும் நேரம்: காலை 9 - 10 மணி, மாலை 5 - 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை.


போன்: +91 - 94434 47826, 96267 65472.

மூலம்


மூலம்

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்



ஸ்தல வரலாறு:

சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக்


காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிறப்பம்சம்:

ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய
சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து
விளங்குவார்கள்.

வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.

சிறப்பம்சம்:

கோயிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

சோழர் கோயில்: இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவர் ராஜராஜ சோழனின் தந்தை ஆவார்.

கோயில் அமைப்பு: பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

மூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : பிரம்மா[Brahma].
அதி தேவதை[AtiDevatha] : அசுரர் [Asura]

இருப்பிடம்:

சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 6 - 10 மணி, மாலை 5.30 - இரவு 7.30 மணி.

போன்: +91 - 44 - 2760 8065, 94447 70579, 94432 25093

Sunday, 2 August 2015

கேட்டை


கேட்டை

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

ஸ்தல வரலாறு:


ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.


சிறப்பம்சம்:


பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது.கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.


கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : இந்திரன் [Indra].
அதி தேவதை[AtiDevatha] : இந்திரன் [Indra]


இருப்பிடம்:


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 7- 9 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.


போன்: +91 97903 42581, 94436 50920

அனுஷம்


அனுஷம்

அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்

ஸ்தல வரலாறு:


ஜமதக்னி மகரிஷி, தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.


சிறப்பம்சம்:


சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான்.ஒருசமயம் அவன் இத் தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற தீவட்டி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, அது தானாகவே எரியத்துவங்கியது. தினமும் இவ்வாறு நடந்தாலும், இதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவன், மன்னரே! இந்தப்பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்ன, என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தை கண்டான். அதனை வெளியே எடுக்க எடுத்த முயற்சி தோற்றது.


எனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் பிரதிஷ்டை செய்தான். பிற்காலத்தில் கோயிலும் உருவானது.நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்

கொள்கிறார்கள். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரியபாண வடிவிலும், அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இந்தசிவனுக்கு சந்தனக்காப் பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.


அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.

பிரதான தேவதை[ Pradhana Devatha] :மித்ரன்[Mithra].
அதி தேவதை [Ati Devatha] :
லக்ஷ்மி[Lakshmi]


இருப்பிடம்:


மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.


திறக்கும் நேரம்: காலை 6 - 11 மணி , மாலை 4 - இரவு 8 மணி


போன்:+91 - 4364 - 320 520.

விசாகம்


விசாகம்

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்

ஸ்தல வரலாறு:


ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல்

பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.


அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.


சிறப்பம்சம்:


விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் ஒரு காலத்தில் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும், அவை இங்கிருக்கின்றன என்ற நம்பிக்கையால், இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். விசாகம் என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு வந்து வழிபடுவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.


விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : இந்திராக்னி [Indragni].
அதி தேவதை [Ati Devatha] : சுப்ரமண்யர் [Subramanya]


இருப்பிடம் :


மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.


திறக்கும் நேரம்: காலை 6-பகல் 1 , மாலை 5- இரவு 8.30 மணி.


போன்:+91 - 4633 - 237 131, 237 343.

சுவாதி


சுவாதி

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்

ஸ்தல வரலாறு:


படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து,

நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.


சிறப்பம்சம்:


சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.


ஆயுள்பலம் தரும் சித்தர்:


கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி சாந்தமாக காட்சியளிக்கிறது. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது. ஆயுள்விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.


சுவாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண் பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்.

பிரதான தேவதை[ Pradhana Devatha] : வாயு [Vayu]
அதி தேவதை [Ati Devatha] : வாயு [Vayu]


இருப்பிடம்:


சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.


திறக்கும் நேரம்: காலை 8 10 மணி, மாலை 5 7 மணி.


போன்: +91- 93643 48700, 93826 84485

சித்திரை


சித்திரை

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்- சித்திரை

ஸ்தல வரலாறு:


முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.


அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும்

படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.


சிறப்பம்சம்:


குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.


சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : துவஷ்ட[Twashta ]
அதிதேவதை[Atidevatha] : துவஷ்டா[Twashta]


இருப்பிடம்:


மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.


திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி, மாலை 3- 6 மணி.


போன்:+ 91- 94439 61948, 97902 95795

அஸ்தம்


அஸ்தம்

அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்- அஸ்தம்

ஸ்தல வரலாறு :


சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என்

கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.


சிறப்பம்சம்:


கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் வலம் வந்தால் இனிய வாழ்வைப் பெறலாம். கலக்கமான மனம், பயந்த சுபாவம், தீராத பிரச்னைகள் தீர திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்யலாம். திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பசு, கன்று தானம் செய்யலாம். பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.


அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்:


ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயாடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வெளியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : சவிதா[Savitha]
அதிதேவதை[Atidevatha] : சாஸ்தா[Sastha]


இருப்பிடம்:


கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 7- மதியம் 12 , மாலை 5.30- இரவு 7.30 மணி


போன்: +91 - 95002 84866.

உத்திரம்


உத்திரம்

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் - உத்திரம்


ஸ்தல வரலாறு :


மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள்,

மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.


சிறப்பம்சம்:


உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:


திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. திருமணம் நிச்சயம் ஆனவுடன், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு பத்திரிகை வைத்து தங்கள் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டுகின்றனர். திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.


கோயில் அமைப்பு:


மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.


உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : பகன்[Bhakan]
அதிதேவதை[Atidevatha] : சூரியன்[Sukra/Sun]


இருப்பிடம் :


திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது.


திறக்கும் நேரம் : காலை 8 - மதியம் 12 மணி, மாலை 6 - இரவு 8 மணி .


போன் :+91 - 431- 254 4070, 98439 51363

பூரம்


பூரம்

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் - பூரம்


ஸ்தல வரலாறு:


சோழமன்னன் கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை
பாக்கியம் இல்லை. சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறை நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறினார். மன்னனும் இத்தலம்


வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவல் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மன்னன் அங்கு சென்று பூமியில் தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது.அவ்விடத்தில் ஒரு லிங்கம் தென் பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்து, அந்த இடத்தில் எழுந்த கோயிலே இது. ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான்.அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


சிறப்பம்சம்:


பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம்.


முக்காடு போட்டு வழிபாடு:


அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியாரின் வம்சத்தில் இத்தல அம்மன் பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்சப் பெண்ணின் மாப்பிள்ளையான சிவனை நினைத்து, முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.


பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப்பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன்[Surya/Sun]
அதிதேவதை[Atidevatha] : பார்வதி[Parvathi]


இருப்பிடம்:


புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம்.


திறக்கும் நேரம்: காலை 7 - 12 மணி, மாலை 5- 7.30 மணி


போன்: +91 - 98651 56430, 99652 11768.

மகம்


மகம்


அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - மகம்


ஸ்தல வரலாறு:


சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.


சிறப்பம்சம்:


பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு,


ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.


இரண்டு அம்பிகையர்:


சிவனுக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. கிழக்குநோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக் குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது.இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.


சூரிய தரிசனம்:


சிவராத்திரியை ஒட்டி 30நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.


மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : பித்ருக்கள்[Pithrus]
அதிதேவதை[Atidevatha] : சுக்கிரன்[Sukra]


இருப்பிடம்:


திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.


திறக்கும் நேரம்: காலை 6- மாலை 6 மணி.

ஆயில்யம்


ஆயில்யம்

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் - ஆயில்யம்

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக
பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான்.துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான்.


இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம், திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை.நண்டுகோயில் என்று சொன்னால் தான் புரியும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர்.சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

தலபெருமை:

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது. பிணி நீக்கும் சிவன்: காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை! என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர். அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார்.

இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

யோக சந்திரன்: புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது. கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

 கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. மேலும், தெய்வ பக்தியுடன் எதையும் செய்து சாதிக்க முடியும் என்ற ஆன்மிக ரீதியான மனத்தை இது தரும். மனக்குழப்பத்தையும், நோய்களையும் தீர்க்கவல்லது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ

பூசம்


பூசம்

 அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் - பூசம்


ஸ்தல வரலாறு:


பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில்


விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது.


பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.


பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும். உடல்நலக்குறைவு, கடன்பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் செல்வவளம் உண்டாகும்.


பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : பிருஹஸ்பதி[Brahaspathi]
அதிதேவதை[Atidevatha] : குரு[Guru]


இருப்பிடம்:


பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.


திறக்கும் நேரம் : மாலை 4 மணி- இரவு 7 மணி.


போன்: +91 - 97507 84944, 96266 85051.

புனர்பூசம்


புனர்பூசம்
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் - புனர்பூசம் நட்சத்திரம்


ஸ்தல வரலாறு:


பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார்.


வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது.


சிறப்பம்சம்:


காஷ்யப முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. இந்த நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடத்த இது உகந்த நட்சத்திரம்.வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக் காக அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.


ஸ்தல சிறப்பு :


மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.


இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பிரதான தேவதை[Pradhana Thevatha] : அதிதி [Adhiti]
அதிதேவதை[Atidevatha] : அதிதி [Adhiti]


திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30 மணி, மாலை 5- இரவு 7 மணி.


போன்: +91 - 4174 226 652, 99941 07395.

திருவாதிரை


திருவாதிரை

அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் - திருவாதிரை நட்சத்திரம்


ஸ்தல வரலாறு:


முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர


மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார்.


இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.


எம பயம் போக்கும் தலம்:


தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த
தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். அவரது பெயரால், அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது. இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயர் உண்டு.


மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : ருத்ரன்[Rudran]
அதிதேவதை [Atidevatha] : ருத்ரன்[Rudran]


இருப்பிடம் :


தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.


திறக்கும் நேரம்: காலை 6.30 - 12, மாலை 4 -இரவு 8.30 மணி


போன்: +91 - 99440 82313, 94435 86451

மிருகசீர்ஷம்


மிருகசீர்ஷம்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் - மிருகசீர்ஷம் நட்சத்திரம்


ஸ்தல வரலாறு:


ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது.கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில்


சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது.


நித்ய கருட சேவை :


பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம்.
மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாகக் கூறப்படுகிறது.


மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால்,அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை.


பரிகாரத்தலம்:


உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல் நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.


மிருகசீர்ஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்.


இருப்பிடம் :


தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : ஸோமன்[Soman]


அதிதேவதை [Atidevatha] : சந்திரன்[Moon]

திறக்கும் நேரம்: மாலை 5 - இரவு 7 மணி.


போன் :+91 - 4366-269 965, 94433 51528

ரோகிணி


ரோகிணி

அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் - ரோகிணி நட்சத்திரம்

தல வரலாறு:

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க,துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்)

உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.


பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.


தல சிறப்பு:


பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகளும் இங்கு உள்ளார்.


எட்டாம் தேதி விசேஷம்:


ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.


ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும்.


இருப்பிடம்:


காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.


திறக்கும் நேரம்:  காலை 7- 11, மாலை 4- இரவு 7.30 மணி


போன்: +91 - 44-2723 1899.

கார்த்திகை


கார்த்திகை

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - கார்த்திகை நட்சத்திரம்

பரணி

தல வரலாறு:

பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர்


(கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை
நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித
ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

சிறப்பம்சம்:

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

வேதம் ஓதும் கிளி:

மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்.

இருப்பிடம்:

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

திறக்கும் நேரம் : காலை 10 - 11 மணி, மாலை 4 - 5 மணி

போன் :+91 - 4364- 282 853 94874 4335