Tuesday, 11 August 2015

ஆலமரம்


ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே. பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் சொல்வார்கள். அதில் தழைப்பிற்கு உரிய மரம் ஆலமரம். தழைத்து ஓங்கி கிளை கோத்திரமாக வாழ்வது என்பது சொல்வார்களே.
அதன்பிறகு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் - கருவேல மரம் என்று தனியாக இருக்கிறது. அந்த கருவேல மரப்பட்டையில் அவ்வளவு விசேஷம் இருக்கிறது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொன்னது.
அதுமட்டுமல்ல, மிகவும் புனிதமானது இந்த மரம். இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் இந்த மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் புனிதமான மரம். இதில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள். இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தைவிட நன்றாக இருக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோரோ·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.
சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள். மக்கு என்று சொல்பவர்களைக் கூட, ஆலமரத்தின் கீழ் போய் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும். எமோஷக், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.
மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமே, அதே மாதிரி இங்கே சும்மா உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம். மன அமைதியைக் கொடுக்கும். நினைவாற்றலைத் தரக்கூடியது. அந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும். அதனால்தான் மக்குப் பிள்ளைகளைக் கூட அங்கு உட்கார வைத்துப் பாருங்கள் அவன் நன்றாகப் படிப்பான். ஒருவிதமான பதற்றம் விலக ஆரம்பித்தாலே மூளை அனைத்தையும் பதியவைக்கத் தொடங்கும்.
இதுமட்டுமல்லாமல், மூலம் அந்தக் காற்றால் குணமாகிறது. ஏனென்றால், அந்தக் காற்றில் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய வெப்பத்தைக் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. வெட்ட வெட்ட முத்தினால் குட்ட என்று சொல்வார்கள். உடம்பில் அதிகச் சூடு ஏற்பட்டால் அதனை வெட்டச் சூடு என்பார்கள். இந்த வெட்ட அதிகமானால் குட்ட. அதாவது, உஷ்ணம் அதிகமானால் குஷ்டம் வந்துவிடும். இந்த வெட்ட குட்ட இரண்டையுமே தணிக்கக் கூடிய நிழல், காற்று அதெல்லாம் உண்டு. அதற்கடுத்ததாக, என்னுடைய தாத்தா ஒரு தண்டம் வைத்திருப்பார். நெடுவழிப் பயணத்தின் போதெல்லாம் அதை கையில் எடுத்துக்கொள்வார். அவரிடம் 4 நாட்களாக ஜுரம் என்று சொல்வார்கள், அதில் 4 தட்டு தட்டுவார். இதேபோல, குழந்தை சரியாகத் தூங்கவேயில்லையென்றால் அதற்கு 4 தட்டு தட்டுவார். வேப்பிலையால் மந்திரித்துவிட்டு அந்த தண்டத்தால் 4 தட்டு தட்டுவார். அதன்பிறகு, காத்து கருப்பு என்று பயப்படுபவர்களுக்கு 4 தட்டு தட்டுவார்.ஏன் தாத்தா வரபவர்களையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கி‌றீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லப்பா, பழமையான ஆல மரத்தினுடைய கம்பு இது. அதில்தான் இதை செய்திருக்கிறேன். ஆலமரத்திற்கென்று சில குணங்கள் உண்டு. அதீத சக்திகள் உண்டு. அதனால் இதில் தட்டினால் சில மாற்றங்கள் உண்டாகும். தெய்வ நம்பிக்கையுடன் அதைச் செய்யும் போது குணப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கும். இன்னமும் அந்த தண்டம் என்னுடைய அப்பாவிடம் இருக்கிறது. அதைத் தொடும்போதே ஒருவிதமான உணர்வு ஏற்படும். அதுபோன்ற குணங்கள் அதற்கு உண்டு. காது, மூக்குப் பிரச்சனைகளுக்கு ஆலம்பாலை பக்குபவப்படுத்தி பயன்படுத்தினால் அது நீங்கும். அடிப்பட்டு வீங்கிய இடத்தில் இந்தப் பாலைத் தடவினால் வீக்கம் வடிந்துவிடும். அதற்கடுத்து, இதன் இலையில் விந்தணுக்களை அதிகரிக்கக் கூடிய சக்தி இருக்கிறது. விந்தணுக்களின் உயிர்த்தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் உண்டு. ஆலமரப்பட்டையை உலர்த்தி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடம்பு பளபளப்பாக ஆகும். இதையெல்லாம் சித்த மருத்துவர்கள் தருவார்கள். ஆலம்பழத்திற்கு சிறுநீர் பாதை கிருமி பிரச்சனைகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீரும்.

Monday, 10 August 2015

கருடன்


கருடன்

*மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.,இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

*பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.

*வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

*பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு,வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.

*கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம்.

*கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும்.ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

*ஞாயிறு – நோய் நீங்கும், திங்கள் – குடும்பம் செழிக்கும்,செவ்வாய் – உடல் பலம் கூடும்,புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்,வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம், வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், சனி – மோட்சம் கிடைக்கும்.

*கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான்,தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

திதி


எந்த நாள் எந்த திதி

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு .

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். .

Saturday, 8 August 2015

அஷ்டலட்சுமிகள்


 1. கஜலட்சுமி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.

2. ஆதிலட்சுமி:-

ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.

3. சந்தானலட்சுமி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்.

4. தனலட்சுமி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.

5. தானியலட்சுமி:-

எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.

6. விஜயலட்சுமி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின் இயல்பு ஆகும்.

7. வீரலட்சுமி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.

8. மஹாலட்சுமி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.

Thursday, 6 August 2015

அங்கோர் வாட் கம்போடியா


உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் !


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

"கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது"! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (மீண்டும் ஒரு முறை), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!



இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது! பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் தெரியவந்தது !!


இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் நாற்பதே ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு, கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது! இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன்.


இறுதியாக வியக்கத்தக்க செய்தி ஒன்று! இந்த 2015வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை !!!


Wednesday, 5 August 2015

ஸ்ரீ ஹயக்ரீவர்

ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.

பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

‘ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே’

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.

அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

ஆத்திசூடியில் ஒளவை கூறியதுபோல்’ நூல் பல கல் ‘ என அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப் படிப்பது போல் ஹயக்ரீவர் தியானத்தையும் கூறி மாணாக்கர் வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

ஹயக்ரீவர் காயத்திரி

‘ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்’

மூலமந்திரம்

‘உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய’

ஞானத்தையும் ஒருமுகப் பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லதும், இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்றத் தேர்ச்சி அடைவோம்.




Monday, 3 August 2015

பகத்சிங்


பகத்சிங்


பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 27, 1907

இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இறப்பு: மார்ச் 23, 1931

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

லாகூர் கொலை வழக்கு

1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

இறப்பு

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்கது.